உங்க வேலைக்கு நாங்க பொறுப்பு: ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அரசு உத்தரவாதம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் தனியார் மயமாக்கினாலும் அதன் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு வருடத்துக்கான பணிக்கு உத்தரவாதம் வழங்கப்படுவதாக மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனம்தான் ஏர் இந்தியா. நிதி நெருக்கடியாலும், வருவாய் இழப்பாலும் தவித்துவரும் ஏர் இந்தியாவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கிறது. இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் ஏர் இந்தியா, தனது செயல்பாட்டுக்குத் தேவையான நிதி இல்லாமல் சொத்து விற்பனை, பங்கு விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.


ஏர் இந்தியாவின் முழுப் பங்குகளையும் விற்பனை செய்து அதைத் தனியார் மயமாக்கும் முயற்சிகள் மும்முரமாக உள்ள நிலையில், ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் அதன் பெயரை மாற்றிக்கொள்ளலாம் உள்ளிட்ட சில சலுகைகளையும் அரசு அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விற்பனைக்கான பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற்றுவந்தாலும், மறுபுறம் ஏர் இந்தியாவின் ஊழியர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.